‘‘இனிமேல் நான் தீர்ப்பு வழங்க முடியாது. ஆனால், எனது 2 ஆண்டு கால தலைமை நீதிபதி பணியை சரியாக செய்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது’’ என நேற்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது 2 ஆண்டு கால பணி நேற்றுடன் முடிவடைந்தது. இவர் தனது பணிக்காலத்தில் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவரது தலைமையிலான அரசியல்சாசன அமர்வுதான், காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது சரி எனக் கூறியது. இது ஜம்மு காஷ்மீரின் அரசியலை மாற்றியமைத்தது. அங்கு தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ஜம்மு காஷ்மீருக்கு கூடிய விரைவில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீரிப்பதற்காக சிறப்பு திருமண சட்டத்தை மாற்ற அவர் மறுத்துவிட்டார். அதே நேரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட சமுதாயத்தினர் வேறுபாடின்றி கவுரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கப்படும் முறையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுத்த வேண்டும் என உத்தரவிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையாக நன்கொடை அளிக்கும் முறையை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுபோல் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். அவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இறுதியாக ஆற்றிய உரையில் கூறியதாவது: நாளை (இன்று) முதல் நான் தீர்ப்பு வழங்க முடியாது. ஆனால் நான் திருப்தியாக இருக்கிறேன். பிரிவு உபசார விழாவை எப்போது வைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்ற பதிவாளர் என்னிடம் நேற்று கேட்ட போது மதியம் 2 மணிக்கு வைத்துக் கொள்ளலாம் என்றேன். அதற்குமேல் என்றால், இங்கு நான் மட்டும்தான் தனியாக இருக்க வேண்டும்.
நீதிபதி பணி என்பது புனித யாத்திரை போன்றது. ஒவ்வொரு நாளும் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நீதிமன்றத்துக்கு வர வேண்டும். நாங்கள் செய்யும் பணி வழக்கில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை பல சிறந்த நீதிபதிகள் அலங்கரித்து பொறுப்புகளை பிறரிடம் விட்டுச் சென்றுள்ளனர். நானும் திறமையான நீதிபதி சஞ்சீவ் கண்காவின் கைகளில் இந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்கிறேன். அவர் திறமையான தலைவர். நீதிமன்றத்தில் நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால், தயது செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனத்து அனைத்து தவறுகளும் மன்னிக்கப்படட்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.
பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் பலரும், நீதித்துறையில் திறம்பட பணியாற்றியவர் தலைமை நீதிபதி சந்திரசூட் என பாராட்டினர். அவரது பதவிக்காலத்தில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பெண் வழக்கறிஞர்களுக்கு பிரத்தியேக அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி என பல திட்டங்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டன.
சமோசா நிச்சயம்: உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் 11-ம் தேதி பொறுப்பேற்கிறார். அவர் கூறுகையில், ‘‘ நீதிபதி சந்திரசூட் அமர்வில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் பின்தங்கியவர்களுக்கும், நீதி தேவைப்படுவோருக்கும் அவர் ஆற்றிய பணி ஒப்பிட முடியாதது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் சமோசா கண்டிப்பாக இடம் பெறும். அவர் சமோசா சாப்பிடுவதை தவிர்த்தாலும், மற்றவர்களுக்கு சமோசா நிச்சயம் கிடைக்கும்’’ என்றார்.