செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 10-க்கு தள்ளிவைப்பு


புதுடெல்லி: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜூலை 10-க்கு தள்ளிவைத்துள்ளது.

அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதியன்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காமல் கடந்த 337 நாட்களாக புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றொரு வழக்கில் ஆஜராகியுள்ளதால் இந்த வழக்கில் ஆஜராக முடியவில்லை. எனவே வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும்ஜூலை 10-க்கு தள்ளிவைத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்துக்கு வரும் மே 20 முதல் ஜூலை 7 வரை கோடை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.