அனைத்து மாவட்டங்களிலும் சத்ரபதி சிவாஜிக்கு கோயில்: உத்தவ் தாக்கரே தேர்தல் வாக்குறுதி


மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிட்டார். ஆண் மாணவர்களுக்கும் இலவச கல்வி, இலவச பேருந்து பயணம், எல்லா மாவட்டங்களிலும் சத்ரபதி சிவாஜிக்கு கோயில் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மும்பையில் உள்ள தனது இல்லமான 'மாடோஸ்ரீ'யில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உத்தவ் தாக்கரே, தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மகா விகாஸ் அகாதி உறுதிமொழிகளின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். ஆனால் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களை தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிவசேனா (யுபிடி), காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி நவம்பர் 20 ஆம் தேதி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிடும் என்று அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே வெளியிட்ட சிவசேனாவின் தேர்தல் அறிக்கையில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு கோயில் கட்டப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பு நீக்கப்படும். மாநிலத்தில் பெண் மாணவர்கள் இலவசக் கல்வியைப் பெறுவது போல், ஆண் மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.

பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம். மாநில காவல்துறையில் 18,000 பெண்களுக்கு பணி வாய்ப்பு. மகாராஷ்டிரா முழுவதும் பெண் காவல் நிலையங்கள் நிறுவப்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படும். தாராவி மறுசீரமைப்பு திட்டம் கைவிடப்படும். நகர்ப்புற, பகுதியளவு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் "மண்ணின் மகன்களுக்கு" மலிவு விலையில் வீடுகள் கட்டித்தரப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு மேளா நடத்தப்படும்’ என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் சிவசேனா( யுபிடி) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

x