ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: குப்வாராவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரின்போது ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், "குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடிவடைந்தது. இதன் காரணமாக ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு ஏகே ரக துப்பாக்கி, இரண்டு கைக்குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன" என்று தெரிவித்தனர். லோலாப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கிய இந்த என்கவுன்டர் நடவடிக்கையில் புதன்கிழமையன்று ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேபோல, கடந்த செவ்வாயன்று பந்திபோரா மாவட்டத்தின் கெட்சன் காடுகளில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் பந்திபோரா பகுதியின் தீவிரவாதிகள் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பெருமளவில் பங்கேற்றதன் காரணமாக, பயங்கரவாதிகள் விரக்தியடைந்து இந்த தாக்குதலை நடத்துவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 2 அன்று, பழைய ஸ்ரீநகர் நகர கன்யார் பகுதியில் நடந்த ஒரு நாள் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பாகிஸ்தானின் உஸ்மான் பாய் என அழைக்கப்படும் சோட்டா வலீத் எனும் லஷ்கர் அமைப்பின் உயர்மட்டத் தளபதி கொல்லப்பட்டார். அந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு உள்ளூர் போலீஸ்காரர்கள் மற்றும் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

x