அமெரிக்க தேர்தல்: துணை அதிபராகும் ஆந்திராவின் மருமகன்


ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுக்குரியின் கணவரான ஜே.டி. வான்ஸ் விரைவில் துணை அதிபர் பதவியை அலங்கரிக்க உள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே நடந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வெற்று அமெரிக்க அதிபர் ஆகி உள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவருக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது கட்சியைச் சேர்ந்த ஜே.டி. வான்ஸை தேர்தலுக்கு முன்பே டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் என முடிவு செய்து விட்டார். ஆதலால், தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றதால், ஜே.டி. வான்ஸ் துணை அதிபராவது உறுதியாகியுள்ளது.

பத்திரிக்கையாளரான இவர், சட்டப்படிப்பு படித்து, செனட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா சிலுக்குரி ஒரு இந்தியராவார். இவர் பிறந்து வளர்ந்தது அமெரிக்கா என்றாலும், இவரது மூதாதையர்கள் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரு மண்டலம், சாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர்களாவர். உஷா சிலுக்குரியின் பெற்றோரான ராதா கிருஷ்ணா, லட்சுமி ஆகியோர் கடந்த 1970-ல் அமெரிக்காவுக்குச் சென்றனர். தாய் லட்சுமி, மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல் துறை நிபுணராக பணியாற்றி வருகிறார். தந்தை ராதா கிருஷ்ணா ‘கிருஷ் சிலுக்குரி’ யாக அனைவராலும் அறியப்பட்டவர். இவர், ஏரோஸ்பேஸ் பொறியாளராக பணியாற்றியவர். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவில் உஷா சிலுக்குரி பிறந்தார். இவர், யேல் பல்கலைக்கழகத்தில் வரலாறு படிப்பில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தில் முதுகலைப் படித்தார். அங்குள்ள உச்ச நீதி மன்றத்திலும் உஷா சிலுக்குரி பணியாற்றினார்.

யேல் பல்கலைக்கழகத்தில்தான் முதன் முதலாக உஷா சிலுக்குரியை ஜே.டி.வான்ஸ் சந்தித்தார். அதன் பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறியது. 2014-ல் இவர்களின் திருமணம் கெண்டக்கியில் நடைபெற்றது. இந்து, கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவரின் வெற்றிக்கு பின்னால் உஷா சிலுக்குரியின் கடின உழைப்பும் அடங்கி உள்ளது. அரசியலில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஒஹாயோ மாகாண செனட்டராக தனது கணவர் ஜே.டி வான்ஸ் போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாக உஷா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

x