மும்பை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு யூடியூப்பின் மதிப்புமிக்க 'கோல்டன் பட்டன்' வழங்கப்பட்டது. இந்த விருதை கூகுள் ஆசியா பசிபிக் யூடியூப் பிராந்திய இயக்குநர் அஜய் வித்யாசாகர் நிதின் கட்கரிக்கு வழங்கினார்.
யூடியூப்பின் மதிப்புமிக்க 'கோல்டன் பட்டன்' அங்கீகாரத்துக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், இந்த விருது தம் மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சின்னம் என்று கூறினார். இந்த மரியாதையின் மூலம் பொதுமக்களின் பாராட்டை அங்கீகரித்த யூடியூப் நிறுவனத்துக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
"மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சின்னம் - உங்கள் அனைவருடனும் பயணத்தைப் பகிர்ந்ததற்காக கோல்டன் பட்டனைப் பெறுவதில் பெருமை அடைகிறேன்! நன்றி, யூடியூப்!," என்று விருது வழங்கும் விழாவின் வீடியோவுடன் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நிதின் கட்கரி யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார் மற்றும் 4,200 வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
அவரது சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் அவர் கலந்து கொண்ட அனைத்து திட்டங்களின் தொடக்க விழாக்கள், புதிய சாலைகள் மற்றும் விரைவு சாலைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பல நிறுவனங்களில் அவர் ஆற்றிய உரைகள் ஆகியவை அடங்கும். 2021 ஆம் ஆண்டில் முதன்முதலாக, கட்கரி தன்னைப் பற்றிய 'நிதின் கட்கரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்' என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பதிவேற்றினார்.