புதுடெல்லி: இலகுரக மோட்டார் வாகன (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோவுக்கு மிகாமல் எடையுள்ள போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பானது, போக்குவரத்து வாகன விபத்துக்களுக்கு எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் உரிமை கோருவதை நிராகரித்து வந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அளித்த தீர்ப்பில், "நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் காரணம் என்று அனுபவ தரவு எதுவும் இல்லை. போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உச்ச வரம்பானது 7,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். எல்எம்வி லைசன்ஸ் உள்ளவர்கள் இனி 7,500 எடைகொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்" என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, மோட்டார் வாகனச் சட்டம், 1988ஐத் திருத்துவதற்கான ஆலோசனைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று சமர்ப்பித்ததையடுத்து, உச்ச நீதிமன்ற அமர்வு ஆகஸ்ட் 21 அன்று தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. இதனையடுத்து இன்றைய தீர்ப்பில், சட்டத் திருத்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
எல்எம்வி வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற்றவர்கள், போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் காப்பீட்டு உரிமை கோர முடியாது என விபத்து வழக்குகளில் காப்பீட்டு நிறுவனங்கள் கூறி வந்தன. இந்த நிலையில் தற்போதைய தீர்ப்பு வந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டம் 1988 இன் படி, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (LMV) பெற்றவர்கள் கார், ஜீப், டாக்சி, ஆட்டோ ரிக்ஷா போன்ற இலகுரக தனியார் வாகனங்களை மட்டுமே இயக்க முடியும். வணிக நோக்கத்திற்கு ஹெவி வெயிட் வாகனங்களுக்கு எல்எம்வி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியாது.