ஸ்ரீநகர்: சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்பது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் தீர்மானத்தை, ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி இன்று தாக்கல் செய்தார். "ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 370வது சட்டப்பிரிவை நீக்கியது ஒருதலைப்பட்சமானது" என்று சௌத்ரி தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா உட்பட பாஜக உறுப்பினர்கள், இது பட்டியலிடப்பட்ட சட்டசபை அலுவல்களில் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார். "நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகக் கோயிலான நாடாளுமன்றத்தில் 370வது பிரிவை நீக்கும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்தின் நகல்களைக் கிழித்து அவையில் வீசியதும், சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த அமளிக்கு மத்தியில் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார், இதனையடுத்து பெரும்பான்மையுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக அமளி ஏற்பட்டதால், சட்டசபை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.