பாரபட்சமான மற்றும் தவறான தகவல்: விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்


புதுடெல்லி: பாரபட்சமான மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றதாக விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தகவல்களை இலவசமாக அறிவதற்கு ஆன்லைன் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில், இத்தளம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்தது. விக்கிபீடியாவில் தற்போது 5 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகள் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளன. விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்பம்சம், இதில் இடம் பெற்றுள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும், எடிட் செய்து தகவல்களை சேர்க்கலாம். இதுவே விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது இந்த அம்சமே விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதில் உள்ள விஷயங்களை தங்களுக்கு சாதகமாகவும் எடிட் செய்து மாற்றிவிடுகின்றனர்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்று விக்கிப்பீடியாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், விக்கிப்பீடியாவில் உள்ள விஷயங்களை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்ற வசதி அபாயகரமானது என கருத்து தெரிவித்தது. இந்த கட்டுப்பாடற்ற எடிட்டிங் வசதி, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றி தவறான கருத்துக்களை தெரிவிக்கும் அபாயம் உள்ளது என்பதை டெல்லி உயர்நீதிமன்றம் எடுத்துக் கூறியது.

இதற்கு பதில் அளித்த வீக்கிப்பீடியா நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகள், விக்கிப்பீடியா தளத்தில் தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் எடிட் செய்பவர்கள் சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விக்கிப்பீடியாவில் உள்ள சில தகவல்கள் பாரபட்சமாகவும், தவறாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. விக்கிப்பீடியா நிறுவனத்துக்கு தவகல்களை அளிக்கும் சிறு குழுவினரின் எடிட்டிங் கட்டுப்பாடு, தகவல்களை பரப்புவதில் விக்கிப்பீடியாவின் பங்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மத்திய அரசு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தகவல் தொடர்பில் விக்கிபீடியா நிறுவனம் நடுவராக செயல்படுகிறதா அல்லது வெளியீட்டாளராக செயல்படுகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது

x