கனடா அரசியலில் தீவிரவாதிகளுக்கு இடம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு


கான்பெரா: கனடா அரசியலில் தீவிரவாதிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி உள்ளார்.

கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதன்காரணமாக இருநாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் கனடாவின் டொரண்டோ மாகாணம், பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கான்பராவில் நேற்று கூறியதாவது: கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் எவ்வித ஆதாரமும் இன்றி இந்தியா மீது கனடா அரசு அபாண்டமாக குற்றம் சாட்டி வருகிறது. இதுபோல ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதை கனடா அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.

கனடாவில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை பார்க்கும்போது சில விஷயங்கள் தெளிவாகிறது. கனடா அரசியலில் தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத சக்திகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்துப் பேசினேன். அப்போது மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம், உக்ரைன் போர் விவகாரம், இந்திய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன்.

இந்திய, அமெரிக்க உறவு வலுவடையும்: இந்தியா, அமெரிக்கா இடையே நட்புறவு நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் வலுவடையும். கடைசியாக பதவி வகித்த 5 அதிபர்களும் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் குவாட் கூட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் குவாட் மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. குவாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளும் இந்திய, பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயல்படும். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்

x