ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி, மகன் நிகில் மீது வழக்குப்பதிவு


பெங்களூர்: சுரங்க முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏ சுரேஷ் பாபு ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமாரசாமிக்கு எதிரான சுரங்க வழக்கை விசாரிப்பதற்காக மூவரும் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) எம்.சந்திரசேகரின் புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசு ஊழியரை மிரட்டியதாகவும், பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் எம்.சந்திரசேகர் தனது புகாரில் கூறியுள்ளார்.

குமாரசாமி 2006 முதல் 2008 வரை கர்நாடக முதல்வராக இருந்தபோது, ​​சட்டத்தை மீறி பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் (எஸ்எஸ்விஎம்) நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக 550 ஏக்கர் சுரங்க குத்தகைக்கு அனுமதி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குமாரசாமிக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் நவம்பர் 4 திங்கள்கிழமை சந்திரசேகர் அளித்த புகாரில், ‘குமாரசாமி தொடர்புடைய சுரங்க வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நான் உள்ளேன். அவர்கள் ஊழல் குறித்த எனது விசாரணையைத் தடுக்க முயன்றனர். மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டதையடுத்து, எச்.டி.குமாரசாமி முதல்வருக்கு எதிராக பொய்யான புகார்களை கூறினார்.

சிறப்பு விசாரணைக்குழுவின், விசாரணை அறிக்கையைத் தயாரித்து, குமாரசாமி மீது வழக்குத் தொடர ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கண்டறிந்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட குமாரசாமிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரி 21/11/2023 அன்று கர்நாடக ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். இதனையடுத்து குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் குமாரசாமி, “புகாரைப் படித்த பிறகு, அது முற்றிலும் அபத்தமானது மற்றும் தீங்கானது என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார்.

x