சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்: எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்ட ஏக்நாத் ஷிண்டே


மும்பை: பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் 'லட்கி பஹின் யோஜனா’ நிதியுதவி திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியதற்காக எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இத்திட்டம் குற்றமாக இருந்தால், சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினார்.

நேற்று இரவு கல்யாண் மேற்கு தொகுதியில் சிவசேனா கட்சியின் வேட்பாளர் விஸ்வநாத் போயரின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பிறகு பேசிய ஷிண்டே, "லட்கி பாஹினுக்காக (அன்பான சகோதரிகள் திட்டம்) நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். லட்கி பஹின் யோஜனா திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி வரும் மகா விகாஸ் அகாதியை தோற்கடிக்க சிவசேனா மற்றும் மகாயுதி கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

அன்புள்ள சகோதரிகளுக்கு லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,500 கிடைக்கும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து லட்கி பஹின் யோஜனாவை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்களை (பெண்கள் வாக்காளர்களை) அணுகினால், ஏன் லட்கி பஹின் யோஜனாவை எதிர்க்கின்றனர் என்று அவர்களிடம் கேளுங்கள்.லட்கி பஹின் யோஜனா மற்றும் பிற நலத்திட்டங்களை மூடுபவர்கள் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்" என்று முதல்வர் ஷிண்டே கூறினார்.

மேலும், இந்தத் திட்டத்தைத் தடுக்க ஏன் நீதிமன்றத்திற்குச் சென்றீர்கள் என எதிர்க்கட்சிகளிடம் கேள்வி கேளுங்கள் என்று பெண்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

மேலும், "மகா விகாஸ் அகாதி ஆட்சியில் நடந்த வளர்ச்சிப் பணிகள் பற்றிச் சொல்லட்டும். எங்கள் நலத்திட்டங்கள் பட்டியலை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு மகா விகாஸ் அகாதி தயாரா?” என்று ஷிண்டே பேசினார்

x