புதுடெல்லி: நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினியைப் பற்றி பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பல்யானை டெல்லி பாஜக விமர்சித்துள்ளது. "உத்தம் நகரின் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல மென்மையாக்குவேன்" என்று பல்யான் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ கிளிப்பில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் பல்யான், “இம்மாதம் 35 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் விரைவாக முடிக்கப்படும். உத்தம் நகரின் சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்களைப் போல மாறும்” என்று கூறியுள்ளார்.
இதனை கண்டித்த டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், “ இந்த மாதம் 35ம் தேதிக்குள் சாலைகள் சீரமைக்கப்படும் என்று கூறி, பெண்களை அவமரியாதை செய்தது மட்டுமின்றி, அப்பகுதி மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார் பல்யான். பெண்களை அவமரியாதை செய்த சட்டமன்ற உறுப்பினரை, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்தை கண்டித்த எம்.பி. ஸ்வாதி மலிவால், “டெல்லியின் உத்தம் நகர் எம்எல்ஏ நரேஷ் பல்யான், ‘ஹேமமாலினியின் கன்னங்கள் போல் சாலைகளை உருவாக்குவோம்’ என்கிறார்!. பெண்களுக்கு எதிரான இந்த அறிக்கைக்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. உத்தம் நகரின் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பத்து வருடங்களாக இந்த மனிதர் தூங்கிக் கொண்டிருக்கிறார்! பெண்களைப் பொருளாகக் கருதும் இத்தகைய மலிவான சிந்தனைக்கு சமூகத்தில் இடமில்லை. பெண்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட இவர் மீது உடனடியாக அரவிந்த் கேஜ்ரிவால் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவும் பல்யானின் கருத்துக்களைக் கண்டித்தார்.