முதல்வர் முதல் எம்எல்ஏ வரை ஊழல்: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்


ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கார்வா பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜார்க்கண்டை சேர்ந்த ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.2,100 நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆட்சி அமைத்தால் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பலன் அடைவார்கள். சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.

நான் உயிரோடு இருக்கும்வரை ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று ஒருவர் (லாலு) கூறினார். அவருக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போராடியது. இப்போது இருதரப்பும் கூட்டணி அமைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று ஆளும் கூட்டணி வாக்குறுதி அளித்தது. ஆனால்இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரசு பணி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. பாஜக ஆட்சிஅமைத்தால் 3 லட்சம் அரசு பணியிடங்கள் வெளிப்படைத்தன்மை யுடன் நிரப்பப்படும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பய் சோரன், பழங்குடி மக்களின் மூத்த தலைவர் ஆவார். ஆளும் கட்சியில் அவர் அவமதிக்கப்பட்டார். இதை பழங்குடி மக்கள்உணர வேண்டும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளில் குடும்ப அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் நலனில் அவர்களுக்கு துளியும் அக்கறை இல்லை. என்னைப் பொறுத்தவரை 140 கோடி இந்தியர்களையும் எனது குடும்பமாக கருதுகிறேன்.

ஜார்க்கண்டில் முதல்வர் முதல் எம்எல்ஏ, எம்பிக்கள் வரை ஊழல் வியாபித்து பரவி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் கூட்டணி, ஊழலில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருக்கிறது.

வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஜார்க்கண்்டில் குடியேறி வருகின்றனர். இந்துக்கள் பண்டிகைகளின்போது கற்கள்வீசப்படுகின்றன. கலவரங்கள் தூண்டி விடப்படுகின்றன. ஆளும்கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படு கிறது. அவர்கள் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜார்க்கண்டில் பழங்குடி மக்களின் அடையாளம் அழிக்கப்படும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

x