பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தவில்லை: டெல்லி போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


புதுடெல்லி: முழுமையான பட்டாசு தடையை உறுதி செய்ய காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தவில்லையென டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த ஆண்டு தடையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்த ஆண்டு தடையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு டெல்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 1) காலை உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்ற அடையாளத்தை டெல்லி பெற்றது. அப்போது டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் கடுமையான குறியீட்டை மீறியது. ஏனெனில் PM 2.5 செறிவு அளவுகள் உயர்ந்து, சுவாச ஆரோக்கியத்திற்கு ஆபத்தான நிலைமையை உருவாக்கியது.

இந்த ஆண்டு டெல்லியில் மாசு அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக உச்ச நீதிமன்றம் கூறியது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம். டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடையை அமல்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை ஒட்டி வைக்கோலை எரிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் விளைவாக, அக்டோபர் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் வைக்கோல்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களின் விவரங்களைக் குறிப்பிடும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்குவரத்து மாசுபாடு, கனரக லாரிகள் நுழைவதால் ஏற்படும் மாசு மற்றும் தொழில்துறை மாசு உள்ளிட்ட மற்ற மாசுபாடுகள் பற்றியும் பரிசீலிப்பதாகக் கூறியது. இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 14-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 என்ற 'கடுமையான' குறியை மீறியதால் திங்களன்று காற்றின் தரம் மோசமடைந்தது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, பல கண்காணிப்பு நிலையங்களில் ஆனந்த் விஹார் (433), வஜிர்பூர் (414), ஜஹாங்கிர்புரி (413), ரோகினி (409) மற்றும் பஞ்சாபி பாக் (404) உட்பட பல இடங்களில் காலை 7 மணிக்கு 400க்கு மேல் காற்றின் தரக்குறியீட்டு அளவுகள் பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் மோசமான காற்றின் தரக்குறியீடு அளவு 382 ஐ பதிவு செய்தது, இது முந்தைய நாளில் 316 ஆக இருந்தது.

x