ஸ்ரீநகர்: இன்று காலை தொடங்கிய ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத்தின் முதல் அமர்வில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வஹித் பர்ரா, 370 வது பிரிவை அகற்றியதற்கு எதிரான ஒரு தீர்மானத்தை அளித்தார். இதனை பாஜக எம் எல் ஏக்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று தொடங்கிய ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத்தின் முதல் அமர்வில், மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) எம்.எல்.ஏ வஹீத் பர்ரா 370 வது பிரிவை ரத்து செய்தததை எதிர்த்து ஒரு தீர்மானத்தை அளித்ததால் சலசலப்பு உருவாகியது.
புல்வாமா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான பர்ரா, சபாநாயகர் அப்துல் ரஹீமிடம் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்தார். மேலும், நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், ஐந்து நாள் அமர்வின் போது இந்த விஷயத்தில் விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அவர், "சட்டசபையின் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டிருந்தாலும், சபாநாயகராக உங்கள் அதிகாரம் தீர்மானத்தை சேர்க்க அனுமதிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இது மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது" என்று கூறினார்
தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, 28 ஜம்மு -காஷ்மீர் பாஜக எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்து கோஷமிட்டனர். சட்டசபை விதிகளை மீறி தீர்மானத்தை கொண்டுவர முயலும் பர்ராவை இடைநீக்கம் செய்ய வேண்டுமென பாஜக எம்.எல்.ஏ ஷாம் லால் சர்மா கோரினார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள் தங்கள் இடங்களில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்தனர். தீர்மானம் இன்னும் தன்னிடம் வரவில்லை என்றும், தீர்மானம் வந்த பின்னர் ஆராய்வதாகவும் சபாநாயகர் கூறினார்.
பாஜக உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்த மறுத்ததால், தேசிய மாநாடு கட்சி எம்.எல்.ஏக்கள் சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அவர்களை விமர்சித்தனர். இந்த அமர்வில் உரையாற்றிய முதல்வர் உமர் அப்துல்லா, “ இந்த தீர்மானத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அது கேமராக்களுக்கு மட்டுமே" என்று கூறினார். மேலும், 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட முடிவை ஜம்மு -காஷ்மீர் மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஒப்புக்கொண்டார்.