எந்த நிலப்பதிவாளர் அலுவலகத்துக்கும் சென்று டெல்லியில் சொத்துகளை பதிவு செய்யலாம்: ஊழலை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகம்


புதுடெல்லி: பொதுமக்கள் சொத்துகளை எந்த நிலப்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யும் திட்டம் டெல்லியில் அமலுக்கு வரவுள்ளது.

பொதுமக்கள் புதிதாக வாங்கும் அல்லது விற்கும் சொத்துகளின் பத்திரப் பதிவுக்காக துணைப் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. அங்கு நீளும் வரிசையால் பல மணி நேரம் வீணாவதுடன் அங்கு நிலவும் லஞ்சம் ஊழலையும் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை தொடர்கிறது.

இதை தடுக்கும் முயற்சியில் டெல்லியில் ஒரு புதிய திட்டத்துக்கு ஆம் ஆத்மி அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, சொத்துகளை வாங்கவும், விற்கவும் பொதுமக்கள் இனி எந்த நிலப்பதிவாளர் அலுவலகத்துக்கும் சென்று பதிவு செய்யலாம். டெல்லியில் மொத்தம் 22 நிலப்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்கு பொதுமக்கள் இனி நேரில் செல்லத் தேவையில்லை. சொத்துக்களை வாங்கும், விற்கும் பணியின் பெரும்பாலானவற்றை இணையதளம் மூலமாகவே முடித்துக் கொள்ளலாம்.

இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவற்றை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகம் சரிபார்த்து அதற்கு அனுமதி அளிக்கும். பிறகு உரிய தேதி மற்றும் நேரம் தெரிவித்த பிறகு அந்த நேரத்தில் எந்தவொரு அலுவலகத்துக்கும் நேரில் சென்று எஞ்சிய பணியை முடிக்கும் வசதி செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் ஆதிஷி கூறும்போது, ‘‘பல்வேறு தரப்பினரின் புகார் கள் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதிகக் கூட்டம் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம், ஊழல் பெருகுகிறது. இதை தடுக்கவே இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

டெல்லியில் பத்திரப் பதிவுத் துறையின் வருமானம் டெல்லி அரசின் நிதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு புள்ளிவிவரப்படி, டெல்லியின் 22 அலுவலகங்களிலும் தினமும் சுமார் 2,000 பதிவுகள் செய்யப்படுகின்றன. பலவற்றில் 200 வரையும் சிலவற்றில் வெறும் 50 சொத்துகளும் பதிவாகின்றன. கடந்த 2022-ல் டெல்லியில் மொத்தம் 1.25 லட்சம் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.

x