புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) அதிக இடங்களை பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகிக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜேஎம்எம் கூட்டணி மற்றும் பாஜக.வினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஞ்சியில் நேற்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், சஞ்சய் சேத், ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி உட்பட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் அமித் ஷா பேசியதாவது: இந்த தேர்தல் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மிகவும் முக்கியமானது. இக்கட்டான நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். மேலும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதில் பழங்குடியினத்தவர் தவிர அனைவருக்கும் ஒரே சட்டம் கொண்டுவரப்படும். இந்த தேர்தல் ஜார்க்கண்ட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு மட்டுமல்ல, மாநில மக்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியது. ஊழல் அரசு வேண்டுமா அல்லது வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வேண்டுமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடையாளம், நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக உறுதியாக உள்ளது. ஊடுருவல்காரர்களிடம் இருந்து மாநிலத்தை பாதுகாக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஊடுருவல்கார்களிடம் இருந்து நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தனி சட்டம் கொண்டு வரப்படும். ஊடுருவல்காரர்கள் இனம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். ‘கோகோ தீதி’ திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.2,100 நிதியுதவி பெறுவார்கள். அத்துடன் தீபாவளி மற்றம் ரக் ஷாபந்தன் விழாக்களின் போது கூடுதலாக இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும். 21 லட்சம் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தரப்படும். தண்ணீர் குழாய் இணைப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.