சென்னை: அனைத்து மாநிலங்களின் மொழி, பண்பாடு, இலக்கியத்தை பாஜகவின் பிடியிலிருந்து காப்போம் என்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் கலை மற்றும் இலக்கிய திருவிழா-2024 நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘திராவிட இயக்க அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியலின் தாக்கம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
தமிழகத்துக்கு வெளியே இருந்தாலும், சொந்த மண்ணிலே இருப்பது போன்ற உணர்வுதான் எனக்குள் ஏற்படுகிறது. இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில், திராவிட அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியல் கூறுகள் என்ற தலைப்பில் என்னை பேச அழைத்திருக்கிறீர்கள். அந்தத் தலைப்பில் பேசுவதை நான் பெருமையாகக் கருதுகின்றேன். ஏனெனில் தமிழகத்தின் அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் இதயமாக திராவிட இலக்கியம் இருக்கிறது.
திராவிட அரசியல் இயக்கம் என்பது அதன் வலுவான மொழி மற்றும் கலாச்சார பெருமைகளுக்கு பெயர் பெற்றது. தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையிலான கலாச்சார, அரசியல் மற்றும் மொழி உறவு தொடர்பான வரலாறு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. இலக்கியம், மொழி மற்றும் அரசியல் ஆகியவற்றில் இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
தமிழகத்தில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, இலக்கியம் என்று சொல்லப்பட்டவை எல்லாம், பக்தி இலக்கியங்கள், புராணக் கதைகளாகவே இருந்தன. ஆனால், எங்கள் தலைவர்கள் தமிழ் இலக்கியத்தின் மூலம் பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனைகளையும் கொண்டு சேர்த்தனர்.
அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் மனித மாண்பிலும் கலாச்சாரத்திலும் வேர் கொண்டிருக்கும் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்களை மக்களிடையே எடுத்துச் சென்றனர்.
திராவிட இயக்கம் தனது அடையாளத்தின் மையமாக தமிழை வைத்துள்ளது. தமிழ், வெறும் தொடர்பு கொள்வதற்கான மொழியாக மட்டுமல்லாமல் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், அழுத்தப்பட்ட சமூகங்களின் அங்கீகாரத்துக்காகவும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது.
பெரியாரின் எழுத்துகளும், அறிக்கைகளும், தலையங்கங்களும் சாதியரீதியான ஒடுக்குதல்கள், ஆணாதிக்க நடைமுறைகள், சமூகத்தின் இறுக்கமான பிற்போக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்தன. எல்லோருக்கும் சுயமரியாதை கிடைக்க பெரியார் குரல் கொடுத்தார்.
இலக்கிய, மொழியியல் கூறுகள் இன்றும் தமிழக மொழி கொள்கை, பண்பாட்டு திருவிழாக்கள், கல்வித் திட்டம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி தமிழ் மொழி அடையாளத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கின்றன.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப்பதால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் உருவாக்கி உள்ளதை மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டுள்ளார்கள். எனவே, பல மாநிலங்கள் தங்களது மொழிகளை இந்தி திணிப்புக்கு காவு கொடுக்காமல் காப்பாற்றியது திராவிட இயக்கம் தான்.
முற்போக்கு அர்த்தங்கள்: இன்றைக்கு இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கின்றன என்று சொன்னால், அதற்கு மிகப்பெரிய காரணமும் திராவிட இயக்கம் என பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம். தமிழ்இலக்கியத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருந்த பழமைத்தனங்கள் எல்லாவற்றையும் நீக்கி புதிய, முற்போக்கு அர்த்தங்களை திராவிட அரசியல் வழங்கியது.
இதனால்தான் திராவிட இயக்கத்துக்கு தமிழ் ஓர் அரசியல் ஆயுதமானது. அதன் மூலம் விளிம்புநிலை மக்களை பெருமளவில் ஈர்த்தது. திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிட சித்தாந்தத்தை இன்னும் பரவலாகக் கொண்டு செல்ல தமிழ் சினிமா முக்கியமான தளமாகியது.
திராவிட இயக்கம் இந்தித் திணிப்பை எதிர்த்ததே தவிர, தனிப்பட்ட முறையில் இந்தி என்கிற மொழி மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. தமிழ் அடையாளத்துக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை எதிர்த்துத் தொடர்ந்து திமுக போராடி வருகிறது. நீட் தேர்வு போன்ற கொள்கைகள் தமிழகத்தின் மாநில சுயாட்சிக்கு சவால் விடுகின்றன.
அதனால் பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் தமிழ்ப் பெருமையை மீண்டும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேவை எழுகிறது. தமிழ் அரசியல் பரப்பில் தங்களைத் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், திமுக உருவாக்கிய இரு மொழிக்கொள்கையைப் பின்பற்றுகின்றனர்.
நம் இரண்டு மாநிலங்களும் நமது பண்பாட்டின் மீது அதிகப்பற்று உடையவை. பாஜகவிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்பவை. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மதம்’ என்ற நிலையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. அதை முறியடிக்க நாம் கரம் கோர்ப்போம். அனைத்து மாநிலங்களின் மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பாஜகவின் பிடியிலிருந்து காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.