பெங்களூரு: தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பல மாநிலங்களில் காங்கிரஸ் மாதிரியை பாஜக பின்பற்றுவதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய டி.கே.சிவகுமார், "அவர்கள் பல மாநிலங்களில் எங்கள் வாக்குறுதிகளை நகலெடுக்கிறார்கள். பாஜக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பாணி கொள்கைகளை காப்பியடித்தது. ஹரியானாவில் இதேபோன்ற வேலையை செய்தது. மகாராஷ்டிராவில் கூட எங்கள் பாணியை பின்பற்றுகின்றனர்.
அவர்கள் எங்களை நகலெடுப்பதற்கு வெட்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் அதை எப்படியும் செய்கிறார்கள். நாங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறோம் என்று யார் கூறுகிறார்கள்?. நாட்டின் நிதி நிலையை விட எங்கள் நிதி நிலைமை வலிமையானதாக உள்ளது" என்று கூறினார்.
முன்னதாக பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளதாகவும், உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். 5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை கடுமையான விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது, ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.