பயங்கரவாதிகள் கொல்லப்படக் கூடாது - பரூக் அப்துல்லாவின் கருத்தால் புது சர்ச்சை


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் மூளையாக செயல்படுபவர்களைக் கண்டறிய, பயங்கரவாதிகளைக் கொல்லாமல் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பினார்.

இதுபற்றி பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, “பிடிபட்ட பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிடும் பரந்த நெட்வொர்க்குகள் பற்றிய தகவல்களை திரட்ட முடியும். பட்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் புதிய அரசை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களால் இது நடந்ததா என்று தனக்கு சந்தேகம் உள்ளது. அதை விசாரிக்க வேண்டும். பயங்கரவாதிகள் பிடிபட்டால் நாங்கள் விசாரணை செய்வோம். இதை யார் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள், அவர்கள் கொல்லப்படக்கூடாது. உமர் அப்துல்லாவை சீர்குலைக்க முயற்சிக்கும் ஏஜென்சி இருக்கிறதா என்று நாங்கள் சரிபார்க்க வேண்டும்” என்றார்

சமீபத்திய பட்காம் பயங்கரவாதத் தாக்குதல் உட்பட ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்ட வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, பரூக் அப்துல்லா, "இது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் கூறுவேன்" என்றார்.

பரூக் அப்துல்லாவின் கருத்துக்கு பதிலளித்த என்சிபி (எஸ்சிபி) தலைவர் சரத் பவார், “பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் மிகப்பெரிய ஆளுமை. அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்வதில் தனது வாழ்நாளைக் கழித்தார். அவருடைய நேர்மை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அத்தகைய தலைவர் ஏதேனும் அறிக்கை வெளியிடுகிறார் என்றால், மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகம், அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அந்தச் சூழலை எப்படிச் சரிசெய்வது என்பது குறித்து முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவிடம், ​​“இந்த பயங்கரவாதம் பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்பது பரூக் அப்துல்லாவுக்குத் தெரியும். இது அனைவரும் அறிந்த உண்மை. இதில் விசாரிக்க என்ன இருக்கிறது?. நாம் அனைவரும் நமது ராணுவம், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.. இவர்களை எதிர்த்து நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். அவர்கள் மனித குலத்தின் எதிரிகள்" என்றார்

பட்காமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத்திய காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள மாகமில் உள்ள மஜாமா பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான சுபியான் மற்றும் உஸ்மான் ஆகியோர் காயமடைந்தனர்.

யூனியன் பிரதேசத்தில் கடந்த மாதம் புதிய அரசு அமைந்த பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஐந்தாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

x