சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் 600 கி.மீட்டர் பரப்பளவில் உள்ள முக்கிய ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை நதிகளில் மீன் பிடிக்க நான்கு மாதங்களுக்கு தடை விதித்துள்ளது அம்மாநில மீன்வளத் துறை.
‘இமாச்சலப் பிரதேசத்தின் குளிர்ந்த நீர் பகுதிகளில் நன்னீர் வகை மீன்கள் எனப்படும் டிரவுட் மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கவும், மீன் வளத்தை பாதுகாக்கவும், நவம்பர் 1, 2024 முதல் பிப்ரவரி 28, 2025 வரை மீன்பிடிக்க முழு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அம்மாநில மீன்வளத்துறை இயக்குனர் விவேக் சாண்டேகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிம்லா மாவட்டத்தில் உள்ள பாப்பர் ஆறு, குலு மாவட்டத்தில் உள்ள பியாஸ், சர்வாரி, பார்வதி, கட்சா மற்றும் சைஞ்ச் ஆறுகள், மண்டி மற்றும் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள உஹால் ஆறு மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள பந்தல் நாலா ஆறு ஆகியவற்றில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
இயற்கையான இனப்பெருக்க காலத்தில் ட்ரவுட் மீன்களை பாதுகாக்க இந்த தடை அவசியம் என்று விவேக் சாண்டேகல் கூறினார். இந்த நான்கு மாத தடையானது இமாச்சலப் பிரதேசத்தில் மீன் வளத்தை நீண்டகாலமாக பாதுகாப்பதை உறுதி செய்வதோடு, மாநிலத்தில் டிரவுட் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த காலகட்டத்தில் மீன்வளத்துறை, மீன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நீர்நிலைப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட பிரத்யேக கண்காணிப்புப் படை நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த குளிர் பிரதேசங்களில் பணிபுரியும் துறை ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று விவேக் கூறினார்.