புது டெல்லி: யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பிலான 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இது ஏப்ரல் 2016 இல் யுபிஐ செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து மிக அதிகம் ஆகும்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதத்தில் 10 சதவீத அளவு மற்றும் மதிப்பில் 14 சதவீதம் யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
அக்டோபரில் தினசரி யுபிஐ பரிவர்த்தனைகள் அளவு 535 மில்லியனையும், மதிப்பில் ரூ. 75,801 கோடியையும் தாண்டியுள்ளது . இது செப்டம்பர் மாதத்தில் தினசரி 501 மில்லியன் மற்றும் ரூ.68,800 கோடியாக இருந்தது.
அக்டோபரில் 467 மில்லியன் எனும் உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) பரிவர்த்தனைகள், செப்டம்பரில் 430 மில்லியனில் இருந்து 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செப்டம்பரில் ரூ.5.65 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அக்டோபரில் 11 சதவீதம் அதிகரித்து ரூ.6.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.