டெல்லி: மூன்று முறை பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பிரம் சிங் தன்வார், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
2013 இல் சத்தர்பூரில் இருந்து டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரம் சிங் தன்வார், முன்னதாக 1993 முதல் 2003 வரை மெஹ்ராலி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தெற்கு டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிரம் சிங் தன்வாரை 2020 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தர்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் கர்தார் சிங் தன்வார் தோற்கடித்தார். கர்தார் சிங் இப்போது பாஜகவில் இணைந்துள்ள நிலையில், பிரம் சிங் தன்வார் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரம் சிங் தன்வாரை கட்சியில் இணைத்துக் கொண்டார். பிரம் சிங் தன்வாரை டெல்லி அரசியலில் ஒரு முக்கிய நபர் என்றும், நகரின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்றும் கூறினார். அவர், "கடந்த 50 ஆண்டுகளாக, அவர் டெல்லி மக்களுக்கு பல்வேறு பதவிகளில் சேவை செய்துள்ளார். சில சமயங்களில் அரசாங்கத்திற்குள் இருந்து, சில நேரங்களில் வெளியில் இருந்து, ஆனால் எப்போதும் பொது சேவைக்கு அர்ப்பணிப்புடன் இருந்துள்ளார்.
பிரம் சிங் தன்வார் டெல்லியின் முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். ஆம் ஆத்மிக்கு நல்லவர்களின் "நிலையான வருகை" இருக்கிறது. முதலில் டெல்லியிலும் இப்போது பஞ்சாபிலும் ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்” என்று கெஜ்ரிவால் கூறினார்.