லடாக்கில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு: லடாக்கின் டெப்சாங், டெம்சோக் ஆகிய 2 பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை, விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முடிவடைந்துவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. லடாக்கின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது என கடந்த 21-ம் தேதி இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், ரோந்துப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், படைகளை விலக்கிக் கொள்ளும் பணி கடந்த 25ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், "கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை புதன்கிழமை முடிவடைந்தது. இரு தரப்பும் ஒருங்கிணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு நாளை நடைபெறும்" என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, "எல்லை விவகாரங்களில் பரஸ்பர உடன்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் எல்லைப் படையினர் படைகளை திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயல்முறை சுமுகமாக முன்னேறி வருகிறது" என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய - சீன எல்லையில் நிலவி வந்த பதற்றம் தற்போது முற்றிலும் தணிந்துள்ளது.
தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
“மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண தொடர் முயற்சி” - “தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை செல்லூர் கால்வாயில் நீர் வெளியேற வசதி: மதுரையில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
“விஜய் கேள்வி சரியானதே” - டி.ஜெயக்குமார்: “‘அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா’ என விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான். மத்திய அரசின் நடவடிக்கையை போன்றுதான் திமுக அரசின் செயல்பாடும் இருக்கிறது. விவசாயிகள் மீது குண்டர் சட்டம், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள், பத்திரிக்கை துறையினரை சிறையில் அடைப்பது என பல்வேறு வகைகளில் திமுக அரசு பாசிச முறையை கையிலெடுத்துள்ளது. எனவே விஜய் கூறியதில் எந்த தவறும் இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்: ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தர்ஷன் தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் பிணைத்தொகையாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார். மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு அனுப்பட்டுள்ள அந்த மிரட்டல் செய்தியில் நடிகர் பணத்தைச் செலுத்த தவறினால் அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,440-க்கும், ஒரு பவுன் ரு.59,520-க்கும் விற்பனையானது. தீபாவளிப் பண்டிகை, முகூர்த்த நாட்கள் ஆகியவை காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனிடையே, அதிகரித்து வரும் தங்கத்தின் விலை காரணமாக, இந்தியாவில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் தேவை நடப்பாண்டு குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
‘கங்குவா’ எடிட்டர் சடலமாக மீட்பு: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘கங்குவா’. திஷா பதானி, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ளனர். நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவருக்கு வயது 43. மலையாளத்தில் வெளியான சவுதி வெள்ளக்கா உட்பட பல படங்களுக்கு இவர் எடிட்டிங் செய்துள்ளார். நிஷாத் யூசுப் மறைவுக்கு நடிகர் சூர்யா உட்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தீபாவளியான வியாழக்கிழமை அன்று திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் புதன்கிழமை பகல் நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செமீ மழை பதிவானது. அமைந்தகரை, பெரம்பூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 செமீ, அம்பத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 5 செமீ மழை பதிவானது. இதன் காரணமாக அண்ணாநகர், கே.கே.நகர், கிண்டி, அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக துணிக்கடைகளில் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. தீவுத்திடலில் பட்டாசு விற்பனையும் பாதிப்படைந்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
“அமித் ஷாவின் உத்தரவே காரணம்” - கனடா குற்றச்சாட்டு: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தான் கூறியதாக கனடா துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அமித் ஷா மீதான தனது குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களையும் அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.