ரயிலில் கழிப்பறை வசதி சரியில்லை: பயணிகளுக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!


ஆந்திரப்பிரதேசம்: திருமலா விரைவு ரயிலில் கழிப்பறை வசதி சரியில்லாத காரணத்தால் ஒரு பயணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குமாறு தென் மத்திய ரயில்வேக்கு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2023ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி வி.மூர்த்தி (55) மற்றும் அவரது குடும்பத்தினர் திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் திருமலா விரைவு ரயிலில் நான்கு 3ஏசி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணித்தனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி, போதிய தண்ணீர் வசதி, ஏர் கண்டிஷனிங் இல்லாமை மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றால் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் துவ்வாடாவில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததால், தனது குடும்பத்தினர் பயணம் முழுவதும் சிரமங்களை எதிர்கொண்டதாக விசாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்தார்.

இந்த புகாரை விசாரித்த விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் ஆணையம், மூர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தினரும் எதிர்கொண்ட பிரச்சினைகள் காரணமாக ரூ.25,000 இழப்பீடு வழங்குமாறு தென் மத்திய ரயில்வேக்கு உத்தரவிட்டது. ரயிலின் கழிவறைகளில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் செயல்படாத ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றால் அவதிப்பட்ட மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனுபவிக்கும் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது.

பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு கட்டணத்தை வசூலிப்பதால், கழிவறைகளில் தண்ணீர், ஏர் கண்டிஷனிங் மற்றும் சரியான சூழல் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே கடமைப்பட்டுள்ளது என்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்-I (விசாகப்பட்டினம்) தீர்ப்பளித்தது.

x