கேரளாவில் பட்டாசு வெடித்து விபத்து: 150 பேர் காயம்; 10 பேர் கவலைக்கிடம்


திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வடக்கு மலபார் பகுதியில் உள்ள அஞ்சூட்டம்பலம் வீரேர்காவு கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. அப்போது, வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த பட்டாசு குடோனில் விழுந்ததையடுத்து மொத்தமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. அப்போது மிகப்பெரிய அளவுக்கு தீப்பிழம்பு உருவானது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 97 பேர் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் தீக்காயங்களுடன் கிசிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் கூறுகையில், “ பட்டாசு வெடித்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் பட்டாசு குடோன் இருந்துள்ளது. இதுவே, இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் செயலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “ தீவிரம் குறைந்த ரூ.28,000 மதிப்பிலான பட்டாசுகள் தற்காலிகமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையில்தான் தீப்பொறி விழுந்து இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால், 2 நாட்கள் நடைபெறும் கோயி்ல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றனர்

x