திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெயரில் மின்னஞ்சல்!


திருப்பதி: திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கோயிலை தகர்த்து விடுவார்கள் என மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக கோயில் நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர்.

திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தகர்த்து விடுவார்கள் என நேற்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதனையடுத்து திருப்பதி போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படைகள் மூலம் உள்ளூர் போலீஸார் உடனடியாக சோதனை நடத்தினர். ஆனால், கோயில் வளாகத்தில் இருந்து வெடிபொருட்களோ அல்லது பிற ஆட்சேபகரமான பொருட்களோ மீட்கப்படவில்லை.

திருப்பதி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு இந்த செய்தியை உறுதி செய்து, அச்சுறுத்தல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

கோவில் நகரமான திருப்பதிக்கு கடந்த மூன்று நாட்களில் வந்த நான்காவது புரளி மெயில் இதுவாகும். முன்னதாக சனிக்கிழமையன்று, இரண்டு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதற்கு முன், நகரத்தில் உள்ள மற்ற மூன்று ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

x