பிரதமர் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு: கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்து


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த 2011-ம் ஆண்டில் "இந்தியா-ஜெர்மனி இன்டர்கவர்மென்டல் கன்சல்டேசன்ஸ்" (ஐஜிசி) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு 6-வது ஐஜிசி கூட்டம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 7-வது ஐஜிசி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் பங்கேற்றனர். இரு நாடுகளின் மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்போது பொருளாதாரம், பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கூட்டத்துக்குப் பிறகு இந்திய, ஜெர்மனி பிரதமர்களுக்கு நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: பாதுகாப்பு துறையில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. உக்ரைன் போர், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போர் பதற்றம் கவலை அளிக்கிறது. எந்தவொரு பிரச்சினைக்கும் போரின் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைன், மேற்கு ஆசியா பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்யும்.

இந்திய, பசிபிக் கடல் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவும் ஜெர்மனியும் உறுதி பூண்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் இரு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. கல்வித் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. ஐஐடி சென்னை, ஜெர்மனியின் டிரெஸ்டென் பல்கலைக்கழகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இரு நாடுகளின் மாணவர்களும் இரட்டை பட்டங்களை பெற முடியும். ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இந்திய இளைஞர்கள் பங்களித்து வருகின்றனர். இந்த பங்களிப்பு தொடரும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் பேசியதாவது: தெற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா முக்கிய பங்களித்து வருகிறது. அதோடு உக்ரைன் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா தீவிர முயற்சி செய்கிறது. இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எட்டப்படுவது அவசியம். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு இரு நாடுகள் கொள்கையை தீர்வாக அமையும். இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய நட்பு நாடுகளின் போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு ஒலாஃப் ஷோல்ஸ் தெரிவித்தார்.

வர்த்தக மாநாடு: முன்னதாக டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் ஆசிய – பசிபிக் -ஜெர்மனி வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஒருபுறம் இந்திய, ஜெர்மனி தொழிலதிபர்கள் ஒன்று கூடி உள்ளனர். மறுபுறம் இரு நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவின் திறன்சார் தொழிலாளர்கள் மீது ஜெர்மனி மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஜெர்மனி அரசு சார்பில் இந்திய தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 20,000 விசாக்கள் வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை தற்போது 90,000 ஆக உயர்ந்துள்ளது. இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 30 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

திறமை, தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணங்களாக உள்ளன. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், குவான்டம், பசுமை ஹைட்ரஜன், விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. உலகின் நன்மைக்காக இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் பேசியதாவது: இப்போதைய சூழலில் சர்வதேச பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. சர்வதேச அமைப்புகள், சர்வதேச விதிகளுக்கு மதிப்பு இல்லை. உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் அதன் பாதிப்புகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கும். உலகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும்.

மத்திய கிழக்கு, கொரிய தீபகற்பம், தென் கிழக்கு சீன கடல் உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழலில் உலகத்தின் நன்மைக்காக இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இதேபோல ஏராளமான இந்தியர்கள் ஜெர்மனியின் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் திறன்வாய்ந்த இளைஞர்களை எங்கள் நாட்டுக்கு வரவேற்கிறோம். இவ்வாறு பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் தெரிவித்தார்.

4 லட்சம் பேர் தேவை: ஜெர்மனி வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனியில் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் 50,000 பேர் மாணவ, மாணவியர் ஆவர். இந்திய மாணவர்கள், இந்திய தொழிலாளர்கள் ஜெர்மனிக்கு வருவதை வரவேற்கிறோம்.

தற்போதைய சூழலில் ஜெர்மனியின் தொழிலாளர் சந்தைக்கு ஆண்டுதோறும் 4 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே இந்தியாவில் இருந்து திறன்சார் தொழிலாளர்களை ஜெர்மனிக்கு அழைத்து வர திட்டமிட்டு இருக்கிறோம். வணிகம், பருவநிலை மாறுபாடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து பணியாற்றும். இவ்வாறு ஜெர்மனி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது

x