வளர்ப்பு நாய், சமையல்காரர் உட்பட பலருக்கு ரூ.10,000 கோடி சொத்துக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா


மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமான நிலையில், தற்போது அவர் எழுதி வைத்த உயில் விவரங்கள் வெளிவந்துள்ளன.

ரத்தன் டாடாவுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. இந்நிலையில், சகோதரர் ஜிம்மி டாடா, தனது தாயின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் சொத்துகள் கிடைக்கும்படி உயில் எழுதியுள்ளார். இவர்கள் தவிர்த்து தனது மனதுக்கு நெருக்கமான உதவியாளர் சாந்தனு, சமையல் கலைஞர் ராஜன் ஷா, சமையல் உதவியாளர் சுப்பையா ஆகியோருக்கும் உயில் எழுதியுள்ளார்.

மேலும், அவரது பிரியத்துக்குரிய வளர்ப்பு நாயான டிட்டோவின் பெயரையும் உயிலில் குறிப்பிட்டுள்ளார் ரத்தன் டாடா. ராஜன் ஷா மற்றும் சுப்பையா இருவரும் டாடாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள். டாடா வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவருடன் இவர்கள் இருவரும் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வளர்ப்பு நாய் டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டுள்ள ரத்தன் டாடா, அதைக் கவனித்துக்கொள்ள ஆகும் செலவை ஈடுகட்டும் வகையில் சொத்துகளை ஒதுக்கியுள்ளார். சாந்தனு வெளிநாடு சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்துள்ளார்.

மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2,000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துகள் உள்ளன. அவரது பங்குகள் அனைத்தும் டாடா குழுமத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு அறக்கட்டளையான ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x