லடாக்: லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
கடந்த 2020 ஜூன் மாதம், லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்களும் சீன வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாடுகளும் தங்கள் படைகளைக் குவித்தன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையில் மோதல் நீடித்து வந்தது.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த 21-ல் அறிவித்தது.
பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ரஷ்யாவில் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இருநாடும் லடாக் எல்லைப் பகுதியிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெரும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய 2 பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லை மோதலில் முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.
அதேசமயம், எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டுமானங்கள் மட்டுமே தற்போது அகற்றப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தொலைவில் முகாமிட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.