மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டவருமான பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியில் இணைந்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாகக் கூறி காங்கிரஸில் இருந்து ஆகஸ்ட் மாதம் ஜீஷன் சித்திக் நீக்கப்பட்டார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் முன்பு மறுத்தார். சமீபத்தில் அவரது தந்தையும், முன்னாள் மகாராஷ்டிர அமைச்சருமான பாபா சித்திக் அவரது அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சூழலில் ஜீஷன் சித்திக் அஜித் பவாரின் தலைமையை ஏற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஒரு உணர்ச்சிகரமான நாள். இந்த கடினமான காலங்களில் என்னை நம்பியதற்காக அஜித் பவார், பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாந்த்ரா கிழக்கில் எனக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. அன்புடன் மற்றும் அனைத்து மக்களின் ஆதரவுடன், பாந்த்ரா கிழக்கில் நான் நிச்சயமாக மீண்டும் வெற்றி பெறுவேன்" என்று அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸுடன் பல வருடங்கள் பயணித்த போதிலும் தன்னை காங்கிரஸால் மதிப்பதில்லை என்று ஜீஷன் குற்றம்சாட்டியுள்ளார். சிவசேனாவின் (யுபிடி) அழுத்தத்தின் கீழ் காங்கிரஸ் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாபா சித்திக், முன்பு பிரிக்கப்படாத பாந்த்ரா தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்து விலகி என்சிபியில் சேர்ந்தார் பாபா சித்திக். இந்த நிலையில், பாபா சித்திக் அக்டோபர் 12 அன்று ஜீஷனின் அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்றார். சல்மான் கானுடனான நெருங்கிய தொடர்பு காரணமாக அவர் குறிவைக்கப்பட்டதாகக் கூறினார்.
மகா விகாஸ் அகாதிக்குள் தொகுதி பகிர்வின் ஒரு பகுதியாக பாந்த்ரா கிழக்கு தொகுதி காங்கிரஸ் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு (யுபிடி) சென்றுள்ளது. இந்தத் தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மருமகன் வருண் சர்தேசாயை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.