கடிகார சின்னத்தைப் பயன்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேசமயம், சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த அஜித் பவாருக்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. இதனால், சரத் பவார் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடங்கி இருந்தாலும், பெருவாரியான எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கள் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அஜித் பவாரை அக்கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் அங்கீகரித்தது. இதனிடையே சரத் பவார் தனிக் கட்சித் தொடங்கினார்.
இந்நிலையில், கட்சியின் கடிகார சின்னத்தை அஜித் பவார் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் சரத் பவார் முறையீடு செய்தார். இவ்வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், கடிகார சின்னத்தைப் பயன்படுத்திக்கொள்ள அஜித் பவாருக்கு அனுமதி வழங்கியது. அதேசமயம், சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது என்று ஆங்கிலம், இந்தி, மராத்தி உள்ளிட்ட நாளிதழ்களில் அஜித் பவார் தலைமையிலான என்சிபி விளம்பரம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
வரும் நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் அஜித் பவார் கட்சி கடிகார சின்னத்தைப் பயன்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை என்றும் இனி அவர் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று சரத் பவார் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டது.
நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த், திபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு, கடிகார சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கோரி அஜித் பவார் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்று கடிகாரம் சின்னம் இடம்பெறும் போஸ்டர்களில் குறிப்பிட வேண்டும் என்றும் இதைப் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.