சரத் பவாருக்கு சறுக்கல்: அஜித் பவாருக்கு அடித்தது அதிர்ஷ்டம்; கடிகாரம் சின்னத்துக்கு சிக்கல் இல்லை! 


மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மூத்த தலைவர் சரத் பவாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகார சின்னம் அஜித் பவாரிடமே இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அஜித் பவார் தலைமையிலான என்சிபி அணி "கடிகாரம்" சின்னத்தை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில், "தேர்தல் முடியும் வரை நீங்கள் (அஜித் பவார் முகாம்) எங்கள் வழிகாட்டுதல்களை மீற மாட்டீர்கள் என்று ஒரு புதிய உறுதிமொழியை தாக்கல் செய்யுங்கள். தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். எங்கள் உத்தரவை மீறும் முயற்சி வேண்டுமென்றே நடப்பதாக நாங்கள் கண்டால், நாங்கள் தானாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கையை தொடங்கலாம்" என்று கூறியது.

என்சிபியின் "கடிகாரம்" சின்னத்தை அஜித் பவார் தலைமையிலான குழு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தி சரத் பவார் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அஜித் பவார் தலைமையிலான குழுவுக்கு, என்சிபியின் "கடிகாரம்" சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, சரத் பவார் அணியினருக்கு "தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவார்" என்ற பெயருடன் "துர்ஹா ஊதும் மனிதன்” சின்னத்தையும் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், சரத் பவாரின் பெயர் மற்றும் புகைப்படங்களை அஜித் பவார் அணியினர் பயன்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ​​சரத் பவார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி,
"நீங்கள் சரத் பவாரைச் சார்ந்தவர் அல்ல என்றும், நீங்கள் அஜித் பவாருடன் முற்றிலும் தொடர்புடைய ஒரு பிரிவினர் என்றும் ஒரு மறுப்புப் பதிவை வைத்து தெளிவுபடுத்தும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் அதனை அஜித் பவார் அணியினர் வெளியிடவில்லை. அவர்கள் கொடுத்த உறுதிமொழியை மீறுகின்றனர். எனக்கோ அல்லது அவர்களுக்கோ கடிகாரம் சின்னத்தை கொடுக்க வேண்டாம். வேறு எந்த சின்னத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள்" என்று மூத்த வழக்கறிஞர் கூறினார்.

இதற்கிடையில், அஜித் பவார் முகாம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் இணங்குவதாகக் கூறினார். "அவர்கள் தவறான ஆவணங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் மறுப்புகளை அளித்துள்ளோம். அங்குள்ள அனைத்து துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஆவணங்களையும் தாக்கல் செய்ய நான் தயாராக இருக்கிறேன்," என்று சிங் கூறினார். இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

x