விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.1,400 கோடி: அறிவித்தது குஜராத் அரசு!


அகமதாபாத்: குஜராத் மாநில விவசாயிகளுக்கு ரூ.1,419 கோடி நிவாரண தொகுப்பை குஜராத் அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,500 முதல் ரூ.22,000 வரை உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து குஜராத் அரசு செய்தித் தொடர்பாளர் ரிஷிகேஷ் படேல், "ஆகஸ்ட் மாதம், குஜராத்தின் சில மாவட்டங்களில் பெய்த மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது. விவசாயிகளின் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு இதுபோன்ற மோசமான சூழ்நிலையில், மாநில அரசு ரூ.1419.62 கோடி விவசாய நிவாரணப் தொகுப்பை அறிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.

நடப்பு பருவமழை காலத்தில், ஆகஸ்ட் மாதத்தில், பஞ்சமஹால், நவ்சாரி, சுரேந்திரநகர், தேவ்பூமி துவாரகா, கெடா, ஆனந்த், வதோதரா, மோர்பி, ஜாம்நகர், கட்ச், தபி, தாஹோத், ராஜ்கோட், டாங், அகமதாபாத், பரூச், ஜூனாகத், சூரத், பதான் மற்றும் சோட்டா உதய்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள 136 தாலுகாக்களில் மொத்தம் 6,812 கிராமங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன.

பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் சேதத்தை மதிப்பிடுவதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பாதிக்கப்பட்ட பகுதியில் மொத்தம் 1,218 குழுக்கள் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் பூபேந்திர படேல் கூறினார்.

x