வரும் தீபாவளி பண்டிகை முதல் ஆந்திராவில் இலவச காஸ் சிலிண்டர் திட்டம் அமல்


அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நாதள்ள மனோகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தீபாவளி பரிசாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகளுக்கு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். தொகையைசெலுத்தி சிலிண்டர் பெற்றுக்கொண்ட 48 மணி நேரத்திற்குள் அந்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,700 கோடி செலவாகும்.

தேர்தல் வாக்குறுதிப்படி ஆந்திரா முழுவதும் இலவச மணல் விநியோகம் செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஜிஎஸ்டி தொகை கூட செலுத்த வேண்டாம். இவ்வாறு அமைச்சர் நாதள்ள மனோகர் கூறினார்.

x