பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே ரஷ்யாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - லடாக் மோதலுக்குப் பிறகு முதன்முறை!


கசான், ரஷ்யா: பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2019-க்குப் பிறகு முதல் இருதரப்பு சந்திப்பிற்காக ரஷ்யாவில் இன்று சந்தித்தனர்.

ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. 2020 மே மாதத்தில் லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்துக்கு பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு தலைவர்களுக்கு இடையில் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். மேலும் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே மீண்டும் ரோந்து செல்வதற்கு, இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையில் உடன்பாடு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்பு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

நவம்பர் 2022 இல் இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு மற்றும் ஆகஸ்ட் 2023 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது இரு தலைவர்களும் சிறிது நேரம் பேசினர். இருப்பினும், அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பிற காரணிகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.

2020 லடாக் மோதலுக்கு பிறகு நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இந்த சூழலில், இன்று நடைபெற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின் காரணமாக, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை இரவு விருந்து கொடுத்தார். இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ம் சந்தித்துக்கொண்டனர்.

x