பாட்னா: பிஹாரில் எரிபொருள் டேங்கரில் மதுபான பாட்டில்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கரில் இருந்து சுமார் 200 மதுபான பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பிஹாரில் டேங்கர் லாரியில் மதுபானம் கடத்தப்படுவது குறித்து கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பிறகு கடத்தல்காரர்களை கைது செய்ய குழு ஒன்றை அதிகாரிகள் அமைத்ததுடன், டேங்கர் லாரி வந்த சாலையும் மறிக்கப்பட்டது. அதைக் கண்ட கடத்தல்காரர்கள் டேங்கரை தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பினர். கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில், நாகாலாந்தில் பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரி முசாபர்பூரில் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து பேசிய கலால் வரி உதவி ஆணையர் விஜய் சேகர் துபே, " நாங்கள் டேங்கர் லாரியை துரத்திச் சென்ற போது, ஓட்டுநரும் மதுபான வியாபாரியும் டேங்கரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மது அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டது. மதுபாட்டில்களை கடத்திய உள்ளூர் வியாபாரி அடையாளம் காணப்பட்டு, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
பிஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால், அங்கே பல இடங்களில் திருட்டுதனமாக மதுபானம் விற்கப்படுகிறது. மேலும், மாநிலத்துக்குள் மதுபானம் கொண்டுவர கடத்தல்காரர்கள் அடிக்கடி புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆம்புலன்ஸ்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் லாரிகளில் பலமுறை மதுபானங்கள் பிடிபட்டுள்ளன.