பெங்களூருவில் கனமழை: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து; 20 விமானங்கள் தாமதம்


பெங்களூரு: பெங்களூருவில் தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கட்டுமானம் நடந்துவந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக இரவிலும் பகலிலும் கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதில் அதிகபட்சமாக சவுடேஸ்வரி நகரில் 157 மிமீ, எலஹ‌ங்காவில் 141 மிமீ மழை பதிவானது. எலஹங்கா, ஹெப்பால், ஹென்னூர், கெத்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.

தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீதிகளில் நிறுத்தப்பட்ட கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இடுப்பளவு தேங்கியதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் படகு மூலம் அவர்களை மீட்டனர்.

இதனிடையே நேற்று மாலை கம்மஹனஹள்ளி அருகே கட்டுமான பணி நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட கட்டிட‌ தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக ஒசூர், மைசூரு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. இதனால் வாகன போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் இருந்து பல்வேறு நகரங்களுக்குபுறப்பட இருந்த 20-க்கும் மேற்பட்ட‌ விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், 4 இண்டிகோ விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன

x