சத்தீஸ்கரில் அதிர்ச்சி: குடிநீரில் மிக அதிகளவு கலந்திருக்கும் யுரேனியம்; நோய் பாதிப்பு அச்சத்தில் மக்கள்!


சத்தீஸ்கர்: துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் சோதனையில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பகுதிகளில் புற்றுநோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோல் மற்றும் சிறுநீரக நோய்களின் ஆபத்தும் அதிகரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு குடிநீரில் யுரேனியம் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தது. இந்தியா போன்ற சில நாடுகள் அந்த அனுமதிக்கப்பட்ட வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மைய ஆய்வு ஒரு லிட்டருக்கு 60 மைக்ரோகிராம் கூட பாதுகாப்பானது என்று பரிந்துரைத்தது

இருப்பினும், சத்தீஸ்கரின் துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் சோதனையில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம்களுக்கு மேல் யுரேனியம் அளவு இருப்பது கண்டறியப்பட்டது; பலோடில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் மற்றும் கான்கேரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் ஒரு லிட்டருக்கு 106 மைக்ரோகிராம் யுரேனியம் இருந்தது. மேற்கண்ட ஆறு மாவட்டங்களிலும் சராசரியாக ஒரு லிட்டருக்கு 86 முதல் 105 மைக்ரோகிராம் யுரேனியம் இருப்பது தெரியவந்துள்ளது.

நிலத்தடி நீரில் உள்ள யுரேனியம் என்பது சுகாதார அதிகாரிகளுக்கு நீண்டகாலமாக கவலையளிக்கும் ஒரு புள்ளியாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கை, பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை தாண்டிவிட்டதாக கூறியது. மேலும் 13 மாநிலங்களின் மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் யுரேனியத்தை கொண்டிருந்தன. கேரளாவில் யுரேனியம் தாக்கம் எதுவும் இல்லை.

ஆகஸ்ட் 2022 இல், பீகாரின் ஒன்பது மாவட்டங்களில் இதேபோன்று அதிக அளவு யுரேனியம் தண்ணீரில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவும் தண்ணீரில் அதிக யுரேனியம் இருப்பதாக தெரிவித்தது.

x