புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு சென்றுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தில் இருந்து 85 இந்தியர்கள் டிஸ்சார்ஜ் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
ரஷ்யாவின் கசான் நகரில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தும் போது, மீதமுள்ள இந்தியர்களை விடுவிப்பது குறித்து இந்திய தரப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இன்று காலை கசான் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜூலை மாதம் மாஸ்கோவில் புதினுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்த விவகாரத்தை பிரதமர் மோடி அழுத்தமாக முன்வைத்தார். சட்டவிரோதமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, ரஷ்ய ராணுவத்தில் சண்டையிட ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் உள்ள அதிகாரிகளுடன் இந்தியத் தரப்பு மிக நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று மோடியின் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
மேலும், "தற்போதைய தகவல்களின்படி, சுமார் 85 பேர் ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்துள்ளனர் என்பது எங்கள் புரிதல். துரதிர்ஷ்டவசமாக, மோதலின் போது உயிரிழந்தவர்களின் சில மரண எச்சங்களையும் நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம்.
எங்கள் புரிதல் என்னவென்றால், ஏறக்குறைய 20 பேர் ரஷ்ய இராணுவத்தில் உள்ளனர். அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் முன்கூட்டியே வெளியேற்றுவதற்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கிறோம். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றும் விக்ரம் மிஸ்ரி கூறினார்
கடந்த ஏப்ரல் முதல், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் குடிமக்களை தங்களின் ராணுவ சேவையில் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது.