புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை அறிவித்தார். இது மே 2020 இல் க்ல்வானில் மோதல்களுடன் தொடங்கிய பதற்றத்தை தீர்க்க வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஒரு பெரிய திருப்புமுனையாக, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "கடந்த பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ரோந்து ஏற்பாடுகள் குறித்து ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் இந்தப் பகுதிகளில் எழுந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்” என்று கூறினார்
டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் ஆகியவை எல்ஏசியில் உள்ள இரண்டு முக்கியமான பகுதிகள் ஆகும். அங்கு ரோந்துப்பணி மீண்டும் தொடங்கும்.
ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இருந்து எல்லைப்பகுதியில் பதற்றமான நிலைமை உள்ளது.