ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 7 பேர் பலி: ‘பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம்’ என பாஜக குற்றச்சாட்டு


ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் மாவட்டத்தின் ககன்கிர் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தாக்குதல் என பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த பகுதியை ராணுவம் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலியானவர்கள் காஷ்மீர் மாநிலம் புத்காமில் வசிக்கும் டாக்டர் ஷாநவாஸ், பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த குர்மீத் சிங், பீகாரை சேர்ந்த முகமது ஹனீப், பாதுகாப்பு மேலாளர் ஃபஹீம் நசீர் மற்றும் கலீம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் மேலாளர் அனில் குமார் சுக்லா. ஜம்முவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஷஷி அப்ரோல் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான கொடூரமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல். இவர்கள் இப்பகுதியில் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு திட்டத்தில் பணிபுரிகின்றனர். நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீதான இந்த தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்

கந்தர்பால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான கவிந்தர் குப்தா, "இது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தின் கோழைத்தனமான வடிவம். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக இங்கு வருகிறார்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது மிகவும் வெட்கக்கேடான செயல். இங்கு தேர்தல் நடத்தப்பட்டு நல்ல சூழல் உருவானது. இங்குள்ள சூழ்நிலையை சீர்குழைக்கவே அவர்கள் விரும்பினர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தொடங்க அவர்கள் விரும்புகின்றனர்.

மேலும், இச்சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். மருத்துவர்கள் மற்றும் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு நமது பாதுகாப்புப் படையினரும், ராணுவமும் பழிவாங்கும். ஜம்மு காஷ்மீர் அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.


x