டெல்லி சிஆர்பிஎப் பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்ததால் பதற்றம்: பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை


புதுடெல்லி: டெல்லி ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு அருகே நேற்று காலை 7.47 மணிக்கு திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்து புகை வெளியேறி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் டெல்லி காவல் துறையின் சிறப்புப் படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும் தரையில் புதைக்கப்பட்டுள்ள கழிவுநீர்குழாய்களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதேநேரம் கையெறி குண்டு வெடித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லிபோலீஸார், தேசிய பாதுகாப்புப் படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த வழக்குடெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளை நிற பவுடர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

x