ஜார்க்கண்டில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் போட்டி: முதல்வர் ஹேமந்த் சோரன் தகவல்


ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் போட்டியிடுகின்றன.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13,20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் 43 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 25-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) தலைவருமான ஹேமந்த் சோரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரும் தேர்தலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் போட்டியிடும். எஞ்சிய 11 தொகுதிகளில் இண்டியா கூட்டணியின் பிற கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகள் களமிறங்கும். ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிப் பங்கீட்டை இப்போது அறிவிக்க முடியாது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.

தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த தேர்தலில் ஜேஎம்எம் 43 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் இம்முறை காங்கிரஸ் 27-28 இடங்களை மட்டுமே பெறும். ஜார்க்கண்ட் தேர்தலில் இண்டியா கூட்டணியின் முக்கிய முகமாக ஹேமந்த் சோரன் இருப்பதால் அவரது கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புகிறது. கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட ஆர்ஜேடி இம்முறை சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்” என்று தெரிவித்தன.

ஜார்க்கண்டில் என்டிஏ கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டை பாஜக நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளான ஏஜேஎஸ்யு 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி 1 என்ற எண்ணிக்கையில் போட்டியிடுகின்றன. ஜார்க்கண்டில் என்டிஏ கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணியில் இங்கு 4 கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2019 தேர்தலில் ஜேஎம்எம் 30, காங்கிரஸ் 16 இடங்களிலும் வென்றன. ஆர்ஜேடி ஓரிடத்தில் வென்றது. 3 கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தன.

பாஜக முந்தைய தேர்தலை விட 12 இடங்கள் குறைந்து 25 இடங்களில் மட்டுமே வென்றது. ஏஜேஎஸ்யு தனித்து போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது.

x