காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா பேச்சு


கொல்கத்தா: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செல்போனில் பேசினார். அப்போது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர் வலியுறுத்தினார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் மம்தா பேச்சுவார்த்தை நடத்தியும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அத்துடன் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் கடந்த 5-ம் தேதி முதல் பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேற்குவங்க தலைமைச் செயலாளர் மனோஜ் பான்ட், உள்துறை செயலாளர் நந்தினி சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று பயிற்சி மருத்துவர்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். போராட்டத்தை கைவிட பயிற்சி மருத்துவர்கள் மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி செல்போன் மூலம் பயிற்சி மருத்துவர்களுடன் நேரடியாக பேசினார். முதல்வர் மம்தா கூறும்போது, “நான் முதல்வராக பேசவில்லை. உங்கள் அக்காவாக பேசுகிறேன். உங்களது அனைத்து கோரிக்கை களும் ஏற்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்கள் அவகாசம் தாருங்கள். நீங்கள் கோரும் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறேன். உங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்” என்று வலியுறுத்தினார்.

பயிற்சி மருத்துவர்கள் கூறும் போது, “பல்வேறு சம்பவங்களில் நீங்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளீர்கள். உங்களது பாணியை பின்பற்றியே நாங்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் தற்போது 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். அந்த கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்

இதற்கு மம்தா பதில் அளித்த போது, “வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு என்னை நேரில் சந்தித்து உங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கடந்த காலங்களில் உங்களுக்காக நான் 3 மணி நேரம் வரை காத்திருந்தேன். இந்த முறை என்னை காத்திருக்க செய்ய வேண்டாம்" என்று தெரிவித்தார். மேற்குவங்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, “மேற்குவங்க சுகாதாரத்துறை செயலாளர் நிகாமை நீக்க வேண்டும் என்று பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை முதல்வர் மம்தா ஏற்க மறுத்து வருகிறார். இதுவே போராட்டம் நீடிப்பதற்கு முக்கிய காரணம். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதை நிறைவேற்ற முதல்வர் மம்தா 4 மாதங்கள் அவகாசம் கோரியுள்ளார்” என்று தெரிவித்தன.

x