டெல்லி சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன்


புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாகவும் செயல்படாத நிறுவனங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கடந்த 2017-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சத்யேந்தர் ஜெயின்இதன் அடிப்படையில் அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. எனினும் ரெகுலர் ஜாமீன் வழங்க உச்ச நீதி மன்றம் மறுத்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் அவர் திகார் சிறைக்கு திரும்ப நேரிட்டது.

விசாரணையில் தாமதம்: இந்நிலையில் சத்யேந்தர் ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. விசாரணையில் தாமதம் மற்றும் 18 மாதங்கள் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குவதாக சிறப்பு நீதிபதி விஷால் காக்னே கூறினார்.

சமீப காலத்தில் வெவ்வேறு வழக்குகளில் ஜாமீனில் விடுதலை பெற்ற ஆம் ஆத்மி மூன்றாவது தலைவர் சத்யேந்தர் ஜெயின் ஆவார். டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மாதமும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த ஆகஸ்ட் மாதமும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். சத்யேந்தர் ஜெயின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கு அர்விந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

x