உத்தரப் பிரதேசம்: 18 டன் தக்காளிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கான்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலை முழுவதும் தக்காளிகள் சிதறின. தற்போது ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், தக்காளி திருட்டை தடுக்க போலீஸார் இரவு முழுவதும் காவலுக்க இருந்தனர்
கான்பூர் அருகே நெடுஞ்சாலையில் செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் 18 டன் தக்காளிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஸ்கூட்டரில் சென்ற சோனல் என்ற பெண் காயமடைந்தார். சிகிச்சைக்காக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
லாரி ஓட்டுநர் அர்ஜுன், பெங்களூரில் இருந்து டெல்லிக்கு தக்காளியை கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையில் வந்த பசு மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது வாகனம் கவிழ்ந்தது. இதில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
லாரி கவிழ்ந்ததால் சாலை முழுவதும் தக்காளிகள் சிதறின. தற்போது தக்காளி ரூ.100 வரை விற்கப்படுவதால், திருட்டை தடுப்பதற்காக சம்பவம் நடந்த உடனேயே போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். லாரியை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இரவு முழுவதும் ரோந்து சென்றனர்.
காவல்துறையின் இந்த அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்காளிகளை காப்பாற்ற அதிகாரிகள் விழிப்புடன் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.