இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு


புதுடெல்லி: அசாமில் குடியேறிய வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டில் அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச மக்களை வெளியேற்றக் கோரி அசாம் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கின. அப்போது வங்கமொழி பேசும் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, அசாம் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்படி கடந்த 1985-ம் ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு, அசாம் மாணவர் அமைப்புகளின் தலைவர்களுக்கு இடையே‘அசாம் உடன்படிக்கை’ கையெழுத்தானது. இதன்படி கடந்த 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25 வரையிலான காலத்தில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தினருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்காக இந்திய குடியுரிமை சட்டத்தில் பிரிவு 6ஏ சேர்க்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அசாம் சம்யுக்த மகா சங்கம் என்ற அமைப்பு, இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ-வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தது. இதே கோரிக்கையை முன்வைத்து அடுத்தடுத்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டில் இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரிக்க தொடங்கியது. கடந்த 2017-ம் ஆண்டில் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் பலர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா, சூரியகாந்த், பர்திவாலா அடங்கிய அமர்வு வழக்கு விசாரணையை விரைவுபடுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா, சூர்யகாந்த் ஆகியோர் இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும் என்று தீர்ப்பளித்தனர். அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

அசாம் அகதிகள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட்டு பிரிவு 6ஏ சேர்க்கப்பட்டு உள்ளது. இது சட்டப்பூர்வமானது. அசாம் மொழி, கலாச்சாரத்துக்கு அகதிகளால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டை மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை.

எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை: நாம் வாழ வேண்டும். மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும். அகதிகள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. இதில் இனிமேல் மாற்றம் செய்ய முடியாது. 6ஏ சட்டப்பிரிவு அவசரகதியில் கொண்டு வரப்படவில்லை. மிக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அனைத்து தரப்பினரின் சம்மதத்துடன் 6ஏ பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டப்பிரிவால் அசாம் மக்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மனுதாரர்களின் வாதங்களை நிராகரிக்கிறோம். இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நீதிபதி பர்திவாலா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 6ஏ பிரிவின்படி இந்திய குடியுரிமை பெற்ற அகதிகளுக்கு 10 ஆண்டுகள் வாக்குரிமை கிடையாது என்று கூறப்பட்டு உள்ளது. இதைகருத்தில் கொண்டால், அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது அசாம் உடன்படிக்கையின் நோக்கம் கிடையாது என்பது தெளிவாகிறது. அப்போதைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். மக்களை அமைதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘அசாம் உடன்படிக்கை’ வரையறுக்கப்பட்டு உள்ளது.

இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் பல்வேறு ஆட்சேபங்களை எழுப்பி உள்ளனர். அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அசாமில் இன்றளவும் சட்டவிரோத ஊடுருவல்கள் தொடர்கின்றன. என்னைப் பொறுத்தவரை 6ஏ சட்டப்பிரிவு காலாவதியாகிவிட்டது. இவ்வாறு நீதிபதி பர்திவாலா தெரிவித்தார்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்படி இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.

x