மயக்க நிலையில் கிடந்த பாம்பு; சிபிஆர் செய்து காப்பாற்றிய நபர் - அதிர்ச்சி வீடியோ!


வதோதரா: குஜராத்தில் வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் நுட்பத்தை செய்து பாம்பின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள வனவிலங்கு மீட்புப் பணியாளரான யாஷ் தத்விக்கு, அங்குள்ள ஒரு பகுதியில் பாம்பு இறந்து கிடப்பதாக அவரது ஹெல்ப்லைன் எண் மூலம் அழைப்பு வந்துள்ளது. அந்த இடத்தை அடைந்த யாஷ், சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள விஷமற்ற பாம்பினை பார்த்துள்ளார்.

இதுபற்றி பேசிய யாஷ், "நான் அங்கு சென்றபோது, ​​பாம்பு மயக்க நிலையில் இருந்தது. எந்த அசைவும் இல்லை, ஆனால் பாம்பு உயிர் பிழைக்கும் என்று நான் நம்பினேன். அதனால் நான் அதன் கழுத்தை என் கையில் எடுத்து, வாயைத் திறந்து மூன்று நிமிடம் அதன் வாயில் ஊதி சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சித்தேன்.முதல் இரண்டு முறை சிபிஆர் கொடுத்த பிறகும் அதன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நான் மூன்றாவது முறையாக சிபிஆர் கொடுத்தபோது, ​​​​அது நகரத் தொடங்கியது" என்று அவர் கூறினார்.

யாஷ் பாம்புக்கு சிபிஆர் செய்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட அந்த பாம்பு தற்போது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

x